6.2 இராவணன் மந்திரப் படலம் (6198 – 6315)

அனுமனால் எரியுண்ட இலங்கை மயனால் புதுப்பிக்கப்படுதல்

6198.
பூவரும் அயனொடு புகுந்து’பொன்னகர்
மூவகை உலகினும் அழகு முற்றுற
ஏவு’என இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொளத் தயெ்வத் தச்சனே. 6.2.1

இலங்கையின் அமைதி நோக்கிய இராவணன் சினம் நீங்குதல்

6199.
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை
நல் நகர் நோக்கினான் நாக நோக்கினான்
‘முன்னையின் அழகு உடைத்து’என்று மொய்கழல்
மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான். 6.2.2

இலங்கையின் எழில் மிகுதிக்குக் காரணம்

6200.
முழுப் பெருந்தனி முதல் உலகின் முந்தையோன்
எழில் குறிகாட்டி நின்று இயற்றி ஈந்தனன்
பழிப்பரும் உலகங்கள் எவையும் பல முறை
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிது உண்டாகுமோ. 6.2.3

இராவணன் பிரமனைப் பூசித்தனுப்புதல்

6201.
திருநகர் யாவையும் திருந்த நோக்கிய
பொரு கழல் இராவணன் அயற்குப் பூசனை
வரன்முறை இயற்றி’நீ வழிக் கொள்வாய்’என்றான்;
அரியன தச்சற்கும் உதவி ஆணையான். 6.2.4

இராவணன் ஆலோசனை மண்டபத்தில் சிங்காதனத்தில் வீற்றிருத்தல்

6202.
அவ்வழி ஆயிரம் ஆயிரம் அவிர்
செவ்வழிச் செம்மணித் தூண்கள் சேர்த்திய
எவ்வம் இல் மண்டபத்து அரிகள் எந்திய
வெவ்வழி ஆசனத்து இனிது மேவினான். 6.2.5

இராவணன் அமைச்சர் முதலியோர் சூழ விளங்குதல்

6203.
வரம்பு அறு சுற்றமும் மந்திரத் தொழில்
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல்
தரம்பெறு தலைவரும் தழுவத் தோன்றினான்
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான். 6.2.6

இராவணன் ஆலோசனை மண்டபத்திலிருந்து முனிவர் முதலியோரைப் போக்குதல்

6204. ‘முனைவரும் தேவரும் மற்றும் உற்றுேளார்
எனைவரும் தவிர்க’என ஏய ஆணையான்
புனைகுழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்;
நினைவு உறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான். 6.2.7

இராவணன் அமைச்சரோடு தங்குதல்

6205.
‘பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்
தண்டலில் மந்திரத் தலைவர் சார்க எனக்
கொண்டு உடன் இருந்தனன்; கொற்ற ஆணையான்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான். 6.2.8

சுற்றத்தாருள் மக்களும் தம்பியரும் அல்லாதாரை மண்டபத்தினின்று போக்குதல்

6206.
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு
ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்
வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்
போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான். 6.2.9

மந்திரம் நிகழும் மண்டபத்தின் காவல் மிகுதி

6207.
திசை தொறும் நிறுவினன் உலகு சேரினும்
பிசைதொழில் மறவரை; பிறிது என் பேசுவ?
விசை உறு பறவையும் விலங்கும் வேற்றவும்
அசை தொழில் அஞ்சின; சித்திரத்தினே. 6.2.10

இராவணன் மந்திரக்கிழவரை நோக்கி வருந்தியுரைத்தல் (6208-6211)

6208.
‘தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என்? இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிதல் மாலைத்தே?
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று’எனாச்
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான். 6.2.11

6209.
சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக்
கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும்
பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;
இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல். 6.2.12

6210.
ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒள் நகர்
ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும்
கூறும் மங்கையர் நறுங் கூந்தலின் சுறு
நாறுகின்றது; நுகர்ந்து இருந்தம் நாம் எலாம். 6.2.13

6211.
மற்று இலது ஆயினும்’மலைந்த வானரம்
இற்று இலது ஆகியது’என்னும் வார்த்தையும்
பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேறு அலால்
முற்றுவது என் இனிப் பழியின் மூழ்கினோம். 6.2.14

படைத்தலைவன் கூறுதல் (6212-6218)

6212.
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான்;
கன்றிய கருங்கழல் சேனை காவலன்
‘ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள்’எனா
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பு இல் நெஞ்சினான். 6.2.15

6213.
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல்
பஞ்சின் நல் மெல் அடி மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது
தஞ்சு என உணர்ந்திலை; உணரும் தன்மையோய். 6.2.16

6214.
கரன்முதல் வீரரைக் கொன்ற கள்வரை
விரிகுழல் உங்கை மூக்கு அரிந்த வீரரைப்
பரிபவம் செய்ஞ்ஞரைப் படுக்கலாது நீ அரசியல் அழிந்தது என்று அயர்திபோலுமால். 6.2.17

6215.
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக்
கண்டவர் பொறுப்பரோ? உலகம் காவலர்
வண்டு அமர் அலங்கலாய்! வணங்கி வாழ்வரோ?
விண்டவர் உறுவலி அடக்கும் வெம்மையோர். 6.2.18

6216.
செற்றனர் எதிர் எழும் தேவர் தானவர்
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது
வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப வேண்டுமால். 6.2.19

6217.
விலங்கினர் உயிர்கெட விலங்கி மீள்கிலாது
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல்
குலம் கெழு காவல! குரங்கில் தங்குமோ?
உலங்கும் நம்மேல் வரவு ஒழிக்கல் பாலதோ? 6.2.20

6218.
போயின குரங்கினைத் தொடர்ந்துபோய் அவண்
ஏயினர் உயிர்குடித்து எவ்வம் தீர்கிலம்;
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும் நம் வலி என உணரக் கூறினான். 6.2.21

மகோதரன் கூறுதல் (6219-6224)

6219.
மற்று அவன் பின் உற மகோதரப் பெயர்க்
கல்தடம் தோளினன் எரியும் கண்ணினான்
முற்று உற நோக்கினன் முடிவும் அன்னதால்
கொற்றவ கேள் என இனைய கூறினான். 6.2.22

6220.
தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர்
தாஅரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய். 6.2.23

6221.
ஏற்றம் என் பிறிது இனி? எவர்க்கும் இன்னுயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை
கூற்றுவான் தன் உயிர் கொள்ளும் கூற்று எனத்
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால். 6.2.24

6222.
வெள்ளி அம் கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்!
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள்வலிக்கு
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும். 6.2.25

6223.
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின்
கண்ணினின் நீங்கினர் யாவர்? கண்டவர்
நண்ணரும் வலத்தினர் யாவர்? நாயக!
எண் இலர் இறந்தவர் எண்ணல் ஆவதோ? 6.2.26

6224.
இடுக்கு இவண் இயம்புவது இல்லை; ஈண்டு எனை
விடுக்குவை ஆம் எனில் குரங்கை வேர் அறுத்து
ஒடுக்கரு மனிதரை உயிர் உண்டு உன் பகை
முடிக்குவென் யான்’என முடியக் கூறினான். 6.2.27

வச்சிரதந்தன் கூறுதல் (6225-6227)

6225.
இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் எல்வையின்
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறினான்
அச் சிரத்தைக்கு ஒரு பொருள் இன்று ஆயினும்
பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான். 6.2.28

6226. ‘போய் இனி மனிசரைக் குரங்கைப் பூமியில்
தேயுமின் கைகளால் தின்மின்’என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி என் இனி
ஆயும் இது? எம் வயின் அயிர்ப்பு உண்டாம் கொலோ? 6.2.29

6227.
எவ்உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத்
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான்
தவ்வின பணி உளதாகத்தான் கொலோ
இவ்வினை என்வயின் ஈகலாது என்றான். 6.2.30

துன்முகன் சொல்லுதல் (6228-6234)

6228.
‘நில் நில்’என்று அவன் தனை விலக்கி’நீ இவை
என்முனும் எளியர்போல் இறுத்தியோ?’எனா
மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லினான். 6.2.31

6229.
திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்;
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியவாம் எனின்
அக்கட! இராவணற்கு அமைந்த ஆற்றலே. 6.2.32

6230.
பொலிவது பொது உற எண்ணும் புன்தொழில்
மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவார்
வலியினர் எனின் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ
ஒலிகழல் ஒருவ! நம் உயிருக்கு அன்பினால். 6.2.33

6231.
கண்ணிய மந்திரக் கருமம் காவல!
மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றும்; நாம்
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரில் தீரர் யாவரே. 6.2.34

6232.
எரி உற மடுப்பதும் எதிர்ந்துேளார் படப்
பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும்
வருவதும் குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து
அரிதுகொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்? 6.2.35

6233.
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும்
வெம் தொழில் தானையின் விரிவும் வீரமும்
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர்
உய்ந்து தம் உயிர் கொடு இவ் உலகத்துள் உளார். 6.2.36

6234.
ஒல்வது நினையினும் உறுதி ஓரினும்
வெல்வது விரும்பினும் வினையம் வேண்டினும்
செல்வது அங்கு; அவர் உழை சென்று தீர்ந்து அறக்
கொல்வது கருமம் என்று உணரக் கூறினான். 6.2.37

மகா பார்சுவன் கூறுதல் (6235-6238)

6235.
காவலன் கண் எதிர் அவனைக் கை கவித்து
‘யாவது உண்டு; இனி நமக்கு? என்னச் சொல்லினான்
‘கோவமும் வன்மையும் குரங்குக்கே’எனா
மா பெரும் பக்கன் என்று ஒருவன் வன்மையான். 6.2.38

6236.
முந்தினர் முரண் இலர் சிலவர் மொய் அமர்
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ?
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்
வெந்ததோ? இலங்கையோடு அரக்கர் வெம்மையும். 6.2.39

6237.
மானிடர் ஏவுவார் குரங்கு வந்து இவ் ஊர்
தான் எரிமடுப்பது நிருதர் தானையே
ஆனவர் அது குறித்து அழுங்குவார்
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ? 6.2.40

6238.
நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலன்
‘நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்
கொன்று தின்று அல்லது ஓர் எண்ணம் கூடுமோ?
என்றனன்; இகல் குறித்து எரியும் கண்ணினான். 6.2.41

பிசாசன் பேசுதல்

6239.
‘திசாதிசை போதும் நாம்; அரசன் செய்வினை
உசாவினன் உட்கினன்; ஒழிதும் வாழ்வு’என்றான்;
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய்கழல்
நிசாசரன் உருப் புணர் நெருப்பின் நீர்மையான். 6.2.42

சூரியசத்துரு சொல்லுதல்
6240.
‘ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வு உறு
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால்
சீரியர் மனிதரே; சிறியம் யாம்’எனச்
சூரியன் பகைஞன் என்று ஒருவன் சொல்லினான். 6.2.43

வேள்வியின் பகைவன் விளம்புதல்

6241.
‘ஆள் வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும்
தாழ்வினை இதனின் மேல் பகரத் தக்கதோ
சூழ்வினை மனிதரால் தோன்றிற்று ஆம்’என
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான். 6.2.44

புகைநிறக் கண்ணன் புகலுதல்

6242.
‘தொகை நிறக் குரங்கு உடை மனிதர்ச் சொல்லி என்?
சிகைநிறச் சூலிதன் திறத்துச் செல்லினும்
தகை நிறத்து எண்ணலன்; சமைதல் நன்று’எனாப்
புகைநிறக் கண்ணனும் புகன்று பொங்கினான் 6.2.45

மற்றையோர் கூறுதல்

6243.
மற்று அவன்பின் உற மற்றையோர்களும்
‘இற்று இதுவே நலம்; எண்ண மற்று இல்’என்று
உற்றன உற்றன உரைப்ப தாயினார்
புற்று உறை அரவு எனப் புழுங்கும் நெஞ்சினார். 6.2.46

கும்பகருணன் கூறுதல் (6244-6253)

6244.
வெம்பு இகல் அரக்கரை விலக்கி’வினை தேரா
நம்பியர் இருக்க’என நாயகனை முன்னா
‘எம்பி எனகிற்கில் உரை செய்வல் இதம்’என்னாக்
கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான். 6.2.47

6245.
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்;
தீவினை நயப்பு உறுதல் செய்தனை; தெரிந்தால்
ஏ! இனம் உறத்தகைய இ துணையவேயோ. 6.2.48

6246.
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்;
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ. 6.2.49

6247.
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால்
உன் உயிர் எனத் தகைய தேவியர்கள் உன்மேல்
இன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள்
பொன் அடி தொழத் தொழ மறுத்தல் புகழ்போலாம். 6.2.50

6248.
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய்
வன் தொழிலினாய் முறை துறந்து சிறை வைத்தாய்
அன்று ஒழிவது ஆயின அரக்கர் புகழ்; ஐயா!
புன்தொழிலின் நாம் இசை பொறுத்தல் புலமைத்தோ! 6.2.51

6249.
ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசு இல் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப்
பேசுவது வீரம் இடை பேணுவது காமம்;
கூசுவது மானிடரை; நன்று நம கொற்றம். 6.2.52

6250.
சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா!
விட்டிடுது மேல் எளிய மாதும்; அவர் வெல்லப்
பட்டிடுது மேல் அதுவும் நன்று; பழி அன்றால். 6.2.53

6251.
‘மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்
கரன் படை படுத்து அவனை வென்று களைகட்டான்;
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்பால்
உரம் படுவதே; இதனின்மேல் உறுதி உண்டோ?’ 6.2.54

6252.
வென்றிடுவர் மானிடவரேனும் அவர் தம்மேல்
நின்று இடைவிடாது நெறிசென்று உற நெருக்கித்
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்றாம். 6.2.55

6253.
‘ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை வேரோடும் அடங்க
நூறுவதுவே கருமம்’என்பது நுவன்றான். 6.2.56

இராவணன் கும்பகருணன் கூறியதற்கு இசைந்து கூறுதல்

6254.
நன்று உரை செய்தாய்! குமர! நான் அது நினைந்தேன்;
ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம்; நம கொடிப் படையை எல்லாம்
‘இன்று எழுக என்க’என இராவணன் இசைத்தான். 6.2.57

இந்திரசித்து இராவணனைத் தடுத்து யானே சென்று
பகைவென்று வருவேன் எனல் (6255-6261)

6255.
என்று அவன் இயம்பியிடும் எல்லையினில்’வல்லே
சென்று படையோடு சிறு மானிடர் சினப்போர்
வென்று பெயர்வாய் அரச! நீ கொல்? என வீரம்
நன்று பெரிது’என்று மகன் நக்கு இவை நவின்றான். 6.2.58

6256.
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர்ப் பேர்
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய
பாசம் முதல் வெம்படை சுமந்து பலர் நின்றார்;
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ. 6.2.59

6257.
‘முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றிச்
செற்ற முதலோரோடு செறுத்தது ஓர் திறத்தும்
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னைப்
பெற்றுமிலை; யான் நெறி பிறந்தும் இலென்’என்றான். 6.2.60

6258.
குரங்கு பட மேதினி குறைத்தலை படப் போர்
அரங்கு பட மானிடர் அலந்தலை படப் பேர்
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார்
சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி சினத்தோய்! 6.2.61

6259.
சொல் இடை கழிக்கில சுருங்கிய குரங்கு என்
கல் இடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில் இடை கிழித்த மிடல்வாளி வெருவித் தம்
பல் இடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய். 6.2.62

6260.
யானை இலர் தேர் புரவி யாதும் இலர்; ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாம் ஓர்
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்;
ஆனவரும் மானிடர் நம் ஆண்மை இனிது அன்றோ! 6.2.63

6261.
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும்
பேர் உலகு யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே
யாரும் ஒழியாமல் நரர் வானரர்கள் என்பார்
வேரும் ஒழியாதவகை கொன்று அலது மீளேன். 6.2.64

இந்திரசித்து கூறியது கேட்டு வீடணன் சினந்து விளம்புதல் (6262-6268)

6262.
என்று அடி இறைஞ்சினன் எழுந்து’விடை ஈமோ
வன் தொழிலினாய்’! எனலும் வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும். 6.2.65

6263.
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினர்
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோர்
காலம் மேல் விளைபொருள் உணரும் கற்பு இலாப்
பாலன் நீ இனையன பகரற் பாலையோ. 6.2.66

6264.
கருத்து இலான் கண் இலான் ஒருவன் கைக்கொடு
திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்த மேதகையவர் வினைய மந்திரத்து
இருத்தியோ? இளமையால் முறைமை எண்ணலாய். 6.2.67

6265.
தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர்
ஆயவர் நிற்க; மற்று அவுணர் ஆதியாம்
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது
மாயமோ? வஞ்சமோ? வன்மையே கொலோ? 6.2.68

6266.
அறம் துறந்து அமரரை வென்ற ஆண் தொழில்
திறம் தெரிந்திடின் அது தானும் செய்தவம்
நிறம் திறம்பாவகை இயற்றும் நீர்மையால்
மறம் துறந்தவர் தரும் வரத்தின் வன்மையால். 6.2.69

6267.
மூவரை வென்று மூன்று உலகும் முற்றுறக்
காவலின் நின்று தம் களிப்புக் கைம் மிக
வீவது முடிவு என வீந்தது அல்லது
தேவரை வென்றவர் யாவர்? தீமையோர்! 6.2.70

6268.
வினைகளை வென்று மேல் வீடு கண்டவர்
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையால்
முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும்
அனையவர் திறத்துளர் யாவர்? ஆற்றினார். 6.2.71

வீடணன் இராவணனை நோக்கிக் கூறுதல் (6269-6296)

6269.
‘பிள்ளைமை விளம்பினை பேதை நீ’என
ஒள்ளிய புதல்வனை உரப்பி’என் உரை
எள்ளலை ஆம் எனின் இயம்பல் ஆற்றுவென்
தெள்ளிய பொருள்;’என அரசற் செப்பினான். 6.2.72

6270.
எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம்
வந்தனைத் தயெ்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன். 6.2.73

6271.
கற்று உறும் மாட்சி என்கண் இன்று ஆயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்! 6.2.74

6272.
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ? 75

6273.
எண் பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால்
‘விண் பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும்
பெண் பொருட்டு’அன்றியும், பிறிது உண்டாம் எனின்
மண் பொருட்டு, அன்றியும் வரவும் வல்லவோ? 6.2.76

6274.
மீன் உடை நெடுங்கடல் இலங்கை வேந்தன் முன்
தான் உடை நெடுந்தவம் தளர்ந்து சாய்வது, ஓர்
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி
தேன் உடை அலங்கலாய்! இன்று தீர்ந்ததோ 6.2.77

6275.
ஏறிய நெடுந்தவம் இழைத்த எல்லை நாள்
ஆறிய பெருங்குணத்து அறிவன் ஆணையால்
கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை;
வேறு இனி அவர் வயின் வென்றி ஆவதோ? 6.2.78

6276.
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ?
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்துவாய்
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம் எனின் விளம்ப வேண்டுமோ? 6.2.79

6277.
‘மேல் உயர் கயிலையை எடுத்த மேலை நாள்
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கினால் குறுகும் கோளது வாலிபால் கண்டனம்; வரம்பு இல் ஆற்றலாய்’ 6.2.80

6278.
தீ இடைக் குளித்த அத் தயெ்வக் கற்பினாள்
வாய் இடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?
‘நோய் உனக்கு யான்’என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள். 6.2.81

6279.
சம்பரப் பெயர் உடைத் தானவர்க்கு இறைவனைத் தனு வலத்தால்
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடைத் தலை துமித்து அமரர் உய்ய
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி
இம்பரில் பணி செயத் தயரதப் பெயரினான் இசை வளர்த்தான். 6.2.82

6280.
மிடல் படைத்து ஒருவனாய் அமரர் கோன் விடையதாய் வெரிநின் மேலாய்
உடல் படைத்து, அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும்
அடல் படைத்து அவனியைப் பெருவளம் தருக என்று அருளினானும்
கடல் படைத்தவர் நெடுங் கங்கை தந்தவன் வழிக் கடவுள் மன்னன். 6.2.83

6281.
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம் அறப் பொருது தன்வேல்
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான்
மை உரைத்து உலவு கண் மனைவிபால் வரம் அளித்தவை மறாதே
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான். 6.2.84

6282.
அனையவன் சிறுவர் எம்பெரும! உன் பகைஞர், அன்னவரை அம்மா!
இனையர் என்று உணர்தியேல், இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்;
முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும்
நினைவருந் தகையர்; நம் வினையினால் மனிதராய் எளிதின் நின்றார். 6.2.85

6283.
கோசிகப் பெயர் உடைக் குல முனித் தலைவன் அக் குளிர் மலர்ப் பேர்
ஆசனத் தவனொடு எவ் உலகமும் தருவன் என்று அமையலுற்றான்
ஈசனில் பெறு படைக்கலம் இமைப் பளவின் எவ் உலகும் யாவும்
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தவை பிடித்துடையர் நம்பா! 6.2.86

6284.
எறுழ்வலிப் பொருவில் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து,
உறுதிறல் கலுழன்மீது ஒருவன் நின்று அமர் செய்தான் உடைய வில்லும்,
தறெு சினத்தவர்கள் முப்புரம் நெருப்பு , உருத்து எய்த அம்பும்
குறுமுனிப் பெயரினான் நிறைதவர்க்கு இறை தரக் கொண்டு நின்றான். 6.2.87

6285.
நாவினால் உலகை நக்கிடுவ; திக்கு அளவிடற்கு உரிய; நாளும்
மேவு தீவிடம் உயிர்ப்பன; வெயில் பொழி எயிற்றன; அவ் வீரர்
ஆவமாம் அரிய புற்று உறைவ; முற்று அறிவருக்கு அழிவு செய்யும்
பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது இரை பெறா; பகழி நாகம். 6.2.88

6286.
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது; இவ் பெரியவேனும்
நாரும் மூரியும் அறா; நம்முடைச் சிலைகள் போல் நலிவவாமோ?
தாருவோ? வேணுவோ? தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும்
மேருவோ மால்வரைக் குலமெலாம் அல்லவோ? வில்லு மன்னோ. 6.2.89

6287.
உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியது மார்பு; உலகை மூடும்
மரம் ஒருங்கிய, கர ஆதியர் விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கின; இனிச் செரு ஒருங் குளது எனில் தெவ்வர் என்பார்
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ? 6.2.90

6288.
சொல் வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள், தம் துணை இலாதார்
ஒல்வரம் பெரிய தோள் இருவரே அமரரோடு உலகம் யாவும்
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார்; நிருதர் வேர் முதலும் வீயக்
கொல்வர் என்று உணர்தலால், அவரை வந்து அணைவது ஓர் இசைவு கொண்டார். 6.2.91

6289.
துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன்பகலும், நிற் சொல்ல ஒல்கி
நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்;
‘பேர் சனகியாம் நெடியது ஆய
நஞ்சு தின்றவர்கள் தாம் நண்ணுவார் நரகம்’என்று, எண்ணி, நம்மை
அஞ்சுகின்றிலர்கள், நின் அருள் அலால் சரண் இலா அமரர்; ஐயா! 6.2.92

6290.
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறுமை கூர
நகல் மதிக்கில, மறுப்பொலிய வாள் ஒளி இழந்து உதயம் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆயின எலாம் இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமையாயின தபோதனர் உளார் வதனம் அம்மா! 6.2.93

6291.
சிந்து முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உழல்தல் செய்வார்
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும்
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார்
வந்துதம் உலகமும் வானமும் கண்டு உவந்து அகல்வர் மன்னோ. 6.2.94

6292.
சொலத் தகாத் துன் நிமித்தங்கள் எங்கணும் வரத்தொடர்வ; ஒன்னார்
வெலத்தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத
குலத்தகால் வய நெடும் குதிரையும் அதிர்குரல் குன்றும் இன்றும்
வலத்த கால் முந்துறத் தந்து, நம் மனை இடைப் புகுதும் மன்னோ! 6.2.95

6293.
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர்; வைகும்
பேயினும் பெரிது பேய் நரிகளும் புரிதரும்; பிறவும் எண்ணின்
கோயிலும் நகரமும் மடநலார் குழலும் நம் குஞ்சியோடும்
தீயின் வெந்திடும்; அலால், ஒரு நிமித்தம் பெறும் திறனும் உண்டோ? 6.2.96

6294.
சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன், திரிசிரத்தோன்,
முந்தமான் ஆயினான், வாலியே முதலினோர் முடிவு கண்டால்,
அந்த மான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும், ஐயா!
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணலாம் ஒருவர் யாரே? 6.2.97

6295.
இன்னம் ஒன்று உரைசெய்வான்,’இனிதுகேள், எம்பிரான்! இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார்,
மன்னும் நம் பகைஞராம் வான் உேளார்; அவரோடும் மாறுகோடல்
கன்னம் அன்று;’இது நமக்கு உறுதி’என்று உணர்தலும் கருமம் அன்றால். 98

6296.
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது
அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு அருளுதி இதன்மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான். 6.2.99

இராவணன் வீடணனைப் பரிகசித்துரைத்தல் (6297-6306)

6297.
கேட்ட ஆண்தகை, கரத்தொடு கரதலம் கிடைப்பப்
பூட்டி, வாய்தொறும் பிறை குலம் வெண்ணிலாப் பொழிய,
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க நக்கு, இவை இவை சொன்னான். 6.2.100

6298.
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்!
பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக்
கொச்சை மானிடர் வெல்குவர் என்றனை; குறித்தது
அச்சமோ? அவர்க்கு அன்பினோ? யாவதோ? ஐயா! 6.2.101

6299.
“‘ஈங்கு மானிடப் பசுக்களுக்கு இலை வரம்” என்றாய்
தீங்கு சொலினை; திசைகளை உலகொடும் செருக்கால்
தாங்கும் ஆனையைத் தள்ளி, அத்தழல் நிறத்தவனை
ஓங்கல் தன்னொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ?’ 6.2.102

6300.
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை; வானோர்
சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் செய்த?
எனக்கு நிற்க; மற்று என்னொடு இங்கு ஒருவயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியராம் தகைமையும் உளதோ? 6.2.103

6301.
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை; பன் முறை தோற்றும்
வெல்லும் ஆற்றலும், ஒருமுறை பொறுத்தனன்; விண்ணைக்
கல்லும் ஆற்றல் என் கிளையையும் என்னையும் களத்தில்
கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கோேளா? 6.2.104

6302.
தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ் செருக்கேல்
மூவரில் பெற்றம் உடையவன் தன்னொடு முழுதும்
காவலின் பெற்ற திகிரியோன் தன்னையும் கடந்தது
ஏவரில் பெற்ற வரத்தினால்? இயம்புதி இளையோய்! 6.2.105

6303.
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின், நம்பால்
வந்த சாபங்கள் எனைப்பல; அவை செய்த வலி என்?
இந்தியாதிகள் அவித்தவர் தேவர் நம் இறுதி
சிந்தியாதவர் யார்? அவை நம்மை என் செய்த? 6.2.106

6304.
அரங்கில் ஆடுவாற்கு அன்பு பூண்டு உடை வரம் அறியேன்,
இரங்கி யான் நிற்ப, என்வலி அவன்வயின் எய்த,
வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு உள்ள
குரங்கெலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி? 6.2.107

6305.
நீல கண்டனும் நேமியும் நேர்நின்று நேரின்,
ஏவலும் அன்னவர் உடைவலி அவன்வயின் எய்தும்;
சாலும் நல்வரம் நினைந்து, அவன் எதிர்செலல் தவிர்ந்து,
வாலி தன்னை அம் மனிதனும் மறைந்துநின்று எய்தான். 6.2.108

6306.
ஊன வில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டிக்
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி,
யான் இழைத்திட இல் இழந்து இன் உயிர் சுமக்கும்
மானிடன் வலி நீ அலாது ஆர் உளர்? மதித்தார். 6.2.109

வீடணன் மீட்டும் உறுதியுரைத்தல் (6307-6308)

6307.
என்று தன் உரை இழித்து,’நீ உணர்விலி’என்னா
‘நன்று, போதும் நாம்; எழுக’எனும் அரக்கனை நணுகா,
‘ஒன்று கேள் இனம் உறுதி’என்று அன்பினன் ஒழியான்
துன்று தாரவன், பின்னரும் இனையன சொன்னான். 6.2.110

6308.
தன்னின் முன்னிய பொருள் இலா ஒருதனித் தலைவன்
அன்ன மானிடன் ஆகிவந்து, அவதரித்து அமைந்தான்
சொன்ன நம்பொருட்டு உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால்
இன்னம் ஏகுதிபோலும் என்று அடி தொழுது இரந்தான். 6.2.111

இராவணன் மீட்டும், வீடணன் கூறியதை மறுத்துரைத்தல் (6309-6314)

6309.
அச் சொல் கேட்டு அவன், ஆழியான் என்றனை ஆயின்
கொச்சைத் துன்மதி எத்தனை போர் இடைக் குறைந்தான்
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம்
முச்சு அற்றான் கொல் அம் முழு முதலோன் என முனிந்தான். 6.2.112

6310.
இந்திரன் தனை இருஞ்சிறை இட்டநாள், இமையோர்
தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான் முன்னம்
வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச்
சிந்த வென்ற நாள் சிறியன்கொல்? நீ சொன்ன தேவன். 6.2.113

6311.
சிவனும் நான்முகத்து ஒருவனும் திருநெடு மாலாம்
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்கப்
புவனம் மூன்றும் நான் ஆண்டு உளது ஆண்ட அப் பொருவில்
உவன் இலாமையிலோ? வலி ஒதுங்கியோ? உரையாய். 6.2.114

6312.
ஆயிரம் பெருந்தோள்களும், அத்துணைத் தலையும்,
மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்,
தீய; சாலவும் சிறிது; என நினைந்து, நாம் தின்னும்
ஓயும் மானிட உருவு கொண்டனன் கொலாம்! ஒருவன். 6.2.115

6313.
பித்தன் ஆகிய ஈசனும் மாலும் என் பெயர் கேட்டு
எய்த்த சிந்தையர்; ஏகுழி ஏகுழி எல்லாம்
கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்
தைத்த வாளிகள் நின்று உள; குன்றின் வீழ் தடித்து இன். 116

6314.
‘வெம் சினம் தரு போரில் என்னுடன் எழ வேண்டா;
இஞ்சி மா நகர் இடம் உடைத்து, ஈண்டு இனிது இருத்தி;
அஞ்சல்! அஞ்சல்!’என்று அயல் இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன், கை எறிந்து, உரும் என நக்கான். 6.2.117

வீடணன் மீட்டும் கூறுதல்
6315.
பின்னும் வீடணன், ஐய! நின் தரம் அலாப் பெரியோர்
முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடு முடிந்தார்
இன்னம் உண்டு, நான் இயம்புவது, இரணியன் என்பான்
தன்னை உள்ளவா கேட்டி என்று உரைசெயச் சமைந்தான். 6.2.118

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here