Monday, January 17, 2022
Homeதமிழ் இலக்கியம்கம்பராமாயணம்கடல் காண் படலம் - யுத்த காண்டம் | ராமாயணம்

கடல் காண் படலம் – யுத்த காண்டம் | ராமாயணம்

கடவுள் வாழ்த்து (6186)

6186.
ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம், பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை! நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!

 

6.1 கடல் காண் படலம் (6187- 6197)
வானரம் படை தென்கடற்கரையிற் சென்று தங்குதல்

6187.
ஊழி திரியும் காலத்தும் உலையாநிலைய உயர்கிரியும்
வாழி வற்றா மறிகடலும் மண்ணும் வடபால் வான் தோய
பாழித் தறெ்கு உள்ளன கிரியும் நிலனும் தாழப் பரந்து எழுந்த
ஏழு பத்தின் பெருவெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால். 6.1.1

இராமன் கடலைக் காணுதல்

6188.
பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்
சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான். 6.1.2

அலைப்பரப்பின் தோற்றம்

6189.
சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின் பால்
மாயன் வந்தான், இனி வளர்வான் என்று கருதி, வரும் தென்றல்,
தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்திப் புடை சுருட்டிப்
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்பு; அம்மா! 6.1.3

தென்றலால் இராமன் வருந்தல் (6190-6191)

6190.
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும், காமன் பூங்கணைக்கும் பற்றாநின்றான் பொன் தோளைச்
சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னே!
கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த் தென்றல் தூற்றும் குறுந்து திவலை. 6.1.4

6191.
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலைதளர்வான்
தன்னைக் கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்வாய்ப்
பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்
புன்னைக் குறும் பூ நறுஞ்சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே. 6.1.5

பவளம் தோன்றுதல்

6192.
சிலை மேல் கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன் படி ஏழும்
தலை மேல் கொண்ட கற்பினாள், மணிவாய் என்னத் தனிதோன்றிக்
கொலைமேற் கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ கொடிப் பவளம். 6.1.6

முத்து வெளிப்படல்

6193.
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல,
வீரம் வில்லி, நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு,
‘ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு’ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ? 6.1.7

கடலின் தோற்றம் (6194-6196)

6194.
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்
தந்த பாவை தவப்பாவை தனிமை தகவோ? எனத் தளர்ந்து
சிந்துகின்ற நறும் தரளக் கண்ணீர் ததும்பத் திரைத்து எழுந்து
வந்து வள்ளல் மலர்த் தாளில் வீழ்வது ஏய்க்கும், மறி கடலே. 6.1.8

6195.
பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றை
துள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி. 6.1.9

6196.
கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,
வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூர
அம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது அணி ஆழி. 6.1.10

இராமன் மேல்விளைவு எண்ணிக் கடற்கரையில் தங்குதல்

6197.
இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்கு
தன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம். 6.1.11

Vijay Sangarramuhttp://kelirr.com
சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular